அண்மையில் திரையில் 'மண்டாடி'யை காணும் வாய்ப்புக் கிடைத்தது. வித்தியாசமான கதைக்களம். தமிழ் சினிமாவில் பெரிதும் புறக்கணிக்கப்பட்ட பல சமூகங்களில் ஒன்றான தமிழ் மீனவ சமூகத்தை மையமாக வைத்து படம் நகர்கிறது. இதுவரை வெளி உலகம் பெரிதும் அறிந்திராத, மீனவ உலகத்தின் படகுப் போட்டியில் ஏற்படும் சண்டை சச்சரவுதான் கதைக்களம்.

மீனவர்களிடையே நடக்கும் பஞ்சாயத்து அங்கிருக்கும் தர்காவுக்குள், அதுவும் 'சைனம்மா' என்ற ஒரு முஸ்லிம் பெண்மணியின் தலைமையில் நடைபெறுகிறது என்பது தமிழ் சினிமாவில் நான் எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. தமிழகத்தில் பல இஸ்லாமியர் அதுவும் பெண்கள், சிறந்த பஞ்சாயத்து தலைவர்களாகச் செயல்படுவதை நான் அறிவேன். இருப்பினும் அந்த யதார்த்தத்தை "சந்தை ஏற்றுக்கொள்ளாது" என்று, சரியாகாத் தமிழ் பேசத் தெரியாத கசாப்பு கடைக்காரராகவோ, குண்டு வைக்கும் தீவிரவாதியாகத்தான், மணிரத்தினத்தின் 'ரோஜா' தொடங்கி பெரும்பாலான தமிழ் படங்கள் சித்தரித்துக் கொண்டிருக்கின்றன. படத்தில் தர்காவும், இஸ்லாமியர்களும் வலிந்து திணிக்கப்படவில்லை. தர்காவுக்குள் ரத்தம் சிந்திவிடக்க் கூடாது என்ற 'ஊர்க் கட்டுப்பாடு'தான் தர்காவுக்குள் பஞ்சாயத்து நடப்பதற்கான காரணம்.

எனது கள ஆய்வில் தமிழகத்தில் பல தர்காக்களில், சாதி, மத பேதமின்றி ஊரார் அனைவரும் ஒன்று கூடி பிரச்சனைகளை பேசி தீர்வு எட்டுவது நடைமுறை என்பது எனக்குத் தெரியும். திருநெல்வேலிக்கு அருகில் இருக்கும், முஸ்லிம்கள் பெரும்பாலும் வாழாத, தெற்கு விஜய நாராயணபுரத்தில் திருட்டு அல்லது வேறு ஏதாவது பிரச்சனையென்றால், அந்த ஊர் மக்கள், ஒன்று கூடி விசாரிப்பது மேத்தாப்பிள்ளை தர்காவில்தான். ஒவ்வொரு வருடமும் கந்தூரி நிகழ்வின் போது, அந்த ஊர் இந்துக்கள், கந்தூரிக்கு வரும் இஸ்லாமியர்கள், இரவு தங்கி, இளைப்பாற தங்கள் வீடுகளை காலி செய்து, திறந்து வைத்திருக்கும் வழக்கம் நூற்றாண்டிற்கும் மேல் இன்றுவரை தொடர்கிறது. இது போல் தமிழகத்தில் மத வேறுபாடுகளைத் தாண்டி, உறவுமுறைகளாக, சமூகங்களை இணைக்கும் பாலமாக, பல இறை நேசர்களின் தர்காக்கள் செயல்படுகின்றன. இந்த களயதார்த்தம் தமிழ் சினிமா இயக்குனர்களின் கண்ணில் இதுவரை பட்டதில்லை. அதனை முதன்முறையாக, அதுவும் தனது முதல் படத்தில் இயக்குனர் மதிமாறன் புகழேந்தி, மிகைப்படுத்தாமல் செய்து காண்பித்திருக்கிறார். கடலிலிருந்து கிராமம் காட்சிப்படுத்தப் படும்போது பள்ளிவாசல் மினாராவும், கோயில் கோபுரமும் ஒரே பிரேமில் காண்பது வெகு இயல்பாக உள்ளது.

வித்தியாசமான கதைக்களம் நம்மை ஈர்த்தது என்றால், வழக்கமான 'ஸ்டார் ஹீரோ'க்கள் இல்லாமல், தமிழ் மண்ணுக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத வெள்ளைத்தோல் கதாநாயகிகள் இல்லாமல், மண்ணின் மைந்தர்களைப் அச்சாகாத் திரையில் காண்பது ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. கதை மாந்தர்கள் எனக்கு நெருக்குமானவர்களாகவும், உறவுகளாகவும் உணர்ந்தேன். இத்தனைக்கும் கதாநாயகி 'மகிமா' கேரளத்து இறக்குமதி என்று பின்னர்தான் தெரிந்து கொண்டேன். (மலையாளிகளை நம் உடன்பிறப்புகளாகக் நான் கருதுவது வேறு விஷயம்). ஊர் முளைப்பாரி கும்மியில், நடனத்தின் ஊடே அவர் வெளிப்படுத்தும் உணர்வுகள் அபாரம். அதேபோல் வில்லன் நடிகர் தெலுங்கு தேசத்தவர். ஆனால் நடிப்பிலோ, நாம் அன்றாடம் உறவாடும் மண்ணின் மைந்தராகவே நம் கண் முன்னே நிற்கிறார். கதையின் நாயகனாக, பெரிதும் கதாநாயக பிம்பச் சிறையில் மாட்டாத, ஓரளவு நகைச்சுவை நடிகராக அறியப்பட்ட சூரி. இந்த சிரத்தையான நடிகர் தேர்வு, திரைக் கதையை வலுப்படுத்துகிறது.

கணிசமான படப்பிடிப்பு கடலில். சவாலான விஷயம். அதனையும் நேர்த்தியாகச் செய்திருக்கின்றார்கள். 'மண்டாடி', தமிழ் சமூகத்தின் இதுவரை பேசப்படாத ஒரு கதையை வெகு நேர்த்தியாக, விறுவிறுப்பாகச் சொல்லியிருக்கிறது. பெரிய ஹீரோக்கள் இல்லாமல், வெள்ளைத் தோல் கதாநாயகிகள் இல்லாமல், தமிழ் இரசிகர்களின் அமோக ஆதரவைப் பெற முடியும் என்பதை 'மண்டாடி' நிரூபித்திருக்கிறது. இயக்குனர் மதிமாறன் புகழேந்தி மற்றும் குழுவினருக்கு வாழ்த்துக்கள். குடும்பத்தோடு அவசியம் பார்க்க வேண்டிய படம் 'மண்டாடி'.