கோவை–அவிநாசி–தாராபுரம் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்
தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரத்திற்காக முதலமைச்சர் விஜய் வருகை தரவுள்ள நிலையில், கோயம்புத்தூர், அவிநாசி, தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பான பயணம் பாதிக்கப்படுவதாக அண்ணாமலை தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார்.
“சில நிமிட பிரசாரத்திற்காக பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது”
முதலமைச்சரின் பாதுகாப்பு முக்கியமானது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை எனக் குறிப்பிட்ட அண்ணாமலை, அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளால் ஆயிரக்கணக்கான பொதுமக்களின் அன்றாடப் பயணம் பாதிக்கப்படுவதை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளார். மருத்துவமனை, வேலை, பள்ளி, கல்லூரி மற்றும் வியாபாரம் உள்ளிட்ட தேவைகளுக்காக பயணிக்கும் மக்கள் பல மணி நேரம் சிரமப்பட வேண்டிய நிலை ஏற்படக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் நிகழ்ச்சிகளை அமைக்க வலியுறுத்தல்
மக்களைச் சந்திக்க வரும் முதலமைச்சரின் பயணம், அதே மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தக் கூடாது என்றும், பொதுமக்களைப் பாதிக்காத வகையில் நிகழ்ச்சிகளை அமைத்துக்கொள்வதே நல்ல நிர்வாகத்தின் அடையாளம் என்றும் அண்ணாமலை தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.


