குடும்பச் சூழ்நிலைக்காக மாறிய வேலை

பெங்களூரு-வில் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்த பெண் ஒருவர், தந்தையின் மறைவுக்குப் பிறகு தாயை கவனித்துக்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டதால் தனது ஐ.டி. வேலையை விட்டுவிட்டு தற்போது ரேபிடோ ஆட்டோ ஓட்டி வருகிறார். ஐ.டி. பணியில் தொடர்ந்து நைட் ஷிப்ட் இருந்ததால், தாயை இரவு நேரங்களில் தனியாக விட்டுச் செல்ல விரும்பவில்லை என்றும், பகல் நேரப் பணிக்கு மாறுவதற்கான வாய்ப்பு கிடைக்காததால் ஆட்டோ ஓட்டும் தொழிலைத் தேர்வு செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த தகவல், அவருடன் ஆட்டோவில் பயணம் செய்த உள்ளடக்க உருவாக்குநர் தன்வியுடனான உரையாடல் மூலம் தெரியவந்துள்ளது.

“ஐ.டி. வேலையைவிட அதிகமாக சம்பாதிக்கிறேன்”

ஆட்டோ ஓட்டுவதன் மூலம் தனது நேரத்தை தானே நிர்வகிக்க முடிவதாகவும், தாயுடன் அதிக நேரம் செலவிட முடிவதாகவும் அந்த பெண் கூறியுள்ளார். மேலும், ஐ.டி. வேலையில் பெற்ற சம்பளத்தைவிட தற்போது அதிகமாக சம்பாதிப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் குடும்பத்தினர் தனது முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும், சில பயணிகள் ஆங்கிலத்தில் சரளமாக பேசும் தன்னைப் பார்த்து ஏன் ஆட்டோ ஓட்டுகிறீர்கள் என ஆச்சரியத்துடன் கேட்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவரது வாழ்க்கை மற்றும் குடும்பப் பொறுப்பு குறித்த உரையாடல் சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.