ஆரோக்கியமான வாழ்வியலையும், கிராமப்புற பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தையும் முன்னெடுக்கும் புதிய முயற்சி
கருங்கலில் நடைபெற்ற தகவல் வழிகாட்டி கிளை திறப்பு விழாவில் “தவப்புதல்வி திட்டம்” சார்பில் அறம் சார்ந்த இயற்கை உணவுப் பொருட்கள் அங்காடி அறிமுகப்படுத்தப்பட்டது. அங்காடியில் இயற்கை மற்றும் பாரம்பரிய உணவுப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனையும் நடைபெற்றது. இந்நிகழ்வில் நாகர்கோவில் சுப்ரீம் ரோட்டரி கிளப் தலைவர் முனைவர் சுபத்ரா கலந்து கொண்டு சிறப்பித்தார்.
தினை, கை குத்தரிசி, கம்பு, கேழ்வரகு, பல்வேறு பயறு வகைகள் உள்ளிட்ட பாரம்பரிய சிறுதானிய உணவுப் பொருட்களுடன், தாயம்மா தயாரிப்புகளும் முக்கிய இடம் பெற்றன.
தவப்புதல்வி திட்டத்தின் முக்கிய நோக்கம், இயற்கை மற்றும் பாரம்பரிய உணவுகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதோடு, கிராமப்புற பெண்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்களுக்கு நிலையான சந்தை வாய்ப்பை உருவாக்கி, அவர்களை தொழில்முனைவோர்களாக உருவாக்குவதாகும்.
கன்னியாகுமரியில் தொடங்கப்பட்டுள்ள இம்முயற்சியை தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தி, பெண்களின் பொருளாதார முன்னேற்றம், இயற்கை வாழ்வியல் மற்றும் ஆரோக்கியமான உணவு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் மக்கள் மைய இயக்கமாக வளர்த்தெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.




